World Book day Special Post


"புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் , புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் "  என்றார் நம் பாரதிதாசன். அந்த வரியினை ஆராய்ந்தால் புத்தகம் மற்றும் புத்தகசாலை என்பது மனிதர்களை ஒரு புதிய வாழ்க்கை வாழ உதவி புரிகிறது என்ற முடிவுக்கு வரலாம்.

வருடாவருடம் ஏப்ரல் 23 ஆம் நாள் "உலக புத்தக தினம் " கொண்டாடப் பட்டு வருகின்றது. 


5 எளிய வழிகளில் உங்கள் குழந்தைகளை எப்படி புத்தகங்களை வாசிக்க வைக்கலாம் என்று நான் உங்களுடன் இந்த போஸ்டில் பகிர்ந்து கொள்கிறேன்.

  1. புத்தகம் படிப்பதை எப்படி சுவாரஸ்யமாக்குவது:
    கஷ்டப்பட்டு புத்தகத்தை படிக்கவைப்பதை விட அவர்களுக்கு இஷ்டப்பட்டு படிக்கச் செய்வது தான் பெற்றோர்காகிய நமக்குச் சவால்!
    குழந்தைகளுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டு வரவேண்டும் எனில் அவர்களுக்குப் பிடித்தமானவற்றைத் தெரிந்து கொண்டு வாசிக்க வேண்டும். இது trial and error முறையில் நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு தேவதைக் கதைகள் பிடிக்கும், ஒரு சிலருக்கு விலங்குகளின் கதைகள் பிடிக்கும்,ஒரே புத்தகத்தை தான் படிப்பேன் என்று ஒரு சிலர் கூறுவர் , அவ்வாறு இருக்கும் போது அவர்களை பெற்றோர்களாகிய நாம் அவர்கள் வழியில் சென்று ஒரு சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் , வாழ்க்கையில் ஒரு முக்கியமான திறனை அவர்களுக்குள் புகுத்தி விட்டோம் என பெருமை கொள்ளலாம்.


  2. உரக்கப்படியுங்கள்:
    டெக்னாலஜி அதிகம் வளர்ந்து வரும் காலத்தில் குழந்தைகளுக்கு நிறைய கவனச்சிதறல்கள் உள்ளன. புத்தகம் படிப்பதன் மேல் ஒரு ஈர்ப்பு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு புத்தகம் வாசிக்கும்போது அதனை உணர்ச்சிப் பூர்வமாக வாசியுங்கள். உதாரணத்திற்கு : நாயைப் பற்றி கதை படிக்கிறீர்கள் என்றால் நாயைப் போல குரைத்துக் காட்டுங்கள் , அவர்களையும் குரைக்கச் செய்யுங்கள். மிகவும் வேகமாக அல்லது மிக மெதுவாகப் படிக்காமல் சரியான வேகத்தில் குழந்தையாக நீங்களும் மாறி புத்தகத்தைப் படியுங்கள். மிகச் சிறிய குழந்தைகள் என்றால் வண்ண வண்ணப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தைக் கொண்டுவாருங்கள்.


  3. விவாதியுங்கள் :
    உங்கள் குழந்தைகளுடன் புத்தகங்கள் வாசிப்பதை இன்னும் சுவாரஸ்யம் ஆக்க வேண்டுமா? எளிய வழி : அவர்கள் வாசித்தப் புத்தகங்களை விவாதிப்பது. என்னென்ன கதாபாத்திரம் பிடித்தது?  எதனால் பிடித்தது ? நீ எப்படி அதை கதாபாத்திரத்தைப் பார்க்கிறாய் ? என்று பல கேள்விகள் கேளுங்கள். இதனால் இரண்டு நன்மைகள் நிகழும். ஒன்று : புத்தகம் படிப்பதன் மேல் ஆர்வம் இரண்டு : உங்கள் குழந்தைகளைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகமாகத்  தெரிந்துகொள்ள வாய்ப்பு.


  4. ஆடியோ புத்தகங்கள் :
    டெக்னாலஜி வளர்ந்து விட்டது , நம் அனைவருக்கும் உலகம் முழுவதும் இருக்கும் புத்தகங்களை அடையும் பாதை திறந்துவிட்டது. அதில் ஒன்று , ஆடியோ புத்தகங்கள். ஒரு ஒரு பகுதியாகப் பிரித்து மக்கள் புத்தகங்களை வாசிக்கிறார்கள் , நம் வேலை அதைக் கேட்பது. இதுவும் ஒரு நல்ல விஷயம் தான். புத்தகமே சிறந்த நண்பன் ஆவான். அவனை மிக அருகில் வைத்துப் பார்த்தாலும் தூரத்தில் வைத்தாலும் நண்பன் நண்பனே ! 


  5. நீங்கள் வாசியுங்கள்:
    நீங்கள் வாசிப்பதைப் பார்த்து உங்கள் குழந்தைகள் வாசிப்பார்கள். இதனால் உங்களுக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் விட்டுப்போகாது, நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்துக் கற்றுக்கொள்வர்.

உலகப் புத்தக தினமான இன்று உங்கள் குழந்தையுடன் என்ன activity செய்யலாம் ?

Bookmark (புத்தகங்களின் உள்ளே எந்தப் பக்கம் படிக்கிறோம் என்று அடையாளம் வைக்க உதவுவது )
என் மகன் செய்த புக்மார்க் 
Mini - Book  
ஒரு தாளை எடுத்து மிகச் சிறியதாக மடித்து அதனுள்ளே ஏதாவது வரைந்து உங்கள் குழந்தைகளைக் கதையாக சொல்லச் செய்யுங்கள்.



மினி புத்தகம் வீடியோ

மீண்டும் சந்திக்கலாம் !
வாசித்தமைக்கு நன்றி !

























Comments